நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கூட்டணியின்றி தனித்த போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தேர்தல் களத்தில் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி அப்போது முதலே கரும்பு - விவசாயி சின்னத்தில் தான் போட்டியிட்டு வருகின்றது. ஆனால், இம்முறை அக்கட்சிக்கு அந்த சின்னம் பெற சற்று சிக்கல்கள் எழுந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட அக்கட்சி, இம்முறை 11 மாநிலங்கள் அதாவது தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா போன்ற முக்கிய மாநிலங்களில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளரிடம் பேசிய, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்ட வரைமுறையின்படி கரும்பு விவசாயி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு தரப்பட்டிருக்க வேண்டும் என்றார்.
திட்டமிட்டபடி கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டு இருக்கிறது என்றும் சின்னம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நிச்சயமாக விவசாயி சின்னத்தை திரும்ப பெறுவோம் எனக் குறிப்பிட்ட சீமான், கர்நாடகாவை மேகதாதுவில் அணையைக் கட்ட விட கூடாது கூறினார்.