விஷால் வெளியிட்ட ஆடியோ ; மிரட்டப்பட்ட நபர்கள் ; நடந்தது என்ன?
புதன், 6 டிசம்பர் 2017 (12:15 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணியில் பல சூழ்ச்சிகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்பு நிராகரிக்கப்பட்டதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. விஷாலை முன் மொழியாத 2 பேரின் பெயர் வேட்பு மனுவில் இடம் பெற்றிருப்பதாக கூறி அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
அதன்பின் விஷால் தேர்தல் அதிகாரியிடம் சென்று கையெழுத்திட்ட இரண்டு பேரையும் சில அதிமுகவினர் மிரட்டியதற்கான ஆடியோ ஆதாரங்களை வழங்கி முறையிட்டார். அதன் பின் இரவு 8.30 மணியளவில் அவரின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அந்நிலையில், திடீர் திருப்பமாக இரவு 11 மணியளவில் அவரின் வேட்பு மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். விஷாலின் வேட்பு மனுவில் கையெழுத்திட்ட சுமதி மற்றும் தீபன் ஆகிய இருவரும் நேரில் வந்து வேட்புமனுவில் நாங்கள் கையெழுத்து இடவில்லை எனக் கூறியதால், வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் அதிகாரியிடம் சமர்பித்த ஆடியோவை விஷால் வெளியிட்டுள்ளார். வேலு என்பவரிடம்தான் விஷால் தொலைப்பேசியில் பேசியுள்ளார். அதில் உள்ள உரையாடல்களை கேட்கும் போது நடந்தது என்ன என்பது தெளிவாக புரிகிறது.
அந்த ஆடியோவில் உள்ள தகவலின் படி:
அதில், நேற்று மாலை 3 மணியளவில், வேலுவின் மனைவியை (சுமதியாக இருக்கலாம்), ஆர்.கே.நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனின் ஆட்களில் முக்கிய நபரான ஆர்.எஸ். ராஜேஸ் மற்றும் சிலர் வீட்டிற்கு வந்து அழைத்து சென்றுள்ளனர். விஷாலின் வேட்பு மனுவில் நீங்கள் கையெழுத்திடவில்லை. அது உங்கள் கையெழுத்தே அல்ல என நீங்கள் கூற வேண்டும் எனக் கூறி மிரட்டியுள்ளனர். மேலும், அப்பெண்ணின் கணவர் வேலுவிற்கு பணம் கொடுத்துள்ளனர். ஆனால், அதை அவர் வாங்க மறுத்துள்ளார். அதனால், அகஸ்தியா தியேட்டர் அருகே மதுசூதனன் அலுவலகம் செயல்படும் அப்பார்மெண்டியில் அவரை கூட்டி சென்றுவிட்டனர்.
அதன்பின், அவரின் மனைவியை வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்தின் மேல் மாடியில் உள்ள ஜோனல் அறைக்கு அழைத்து சென்று மிரட்டி ஒரு கடிதத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
இந்த தகவல் அடங்கிய ஆடியோவைத்தான் விஷால் அதிகாரியிடம் கொடுத்துள்ளார். எனவே, அவரின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பின் சுமதி மற்றும் தீபன் என்ற இருவரையும் மிரட்டி தேர்தல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து சென்று ‘இது தங்கள் கையெழுத்து இல்லை’ என கூற வைத்துள்ளனர். அதன் பின்பே, விஷாலின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார் எனத் தெரிகிறது.
ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளுக்கு தலையசைக்கும் நபரை தேர்தல் அதிகாரியாக நியமித்து, ஒரு ஜனநாயக படுகொலையை நிகழ்த்தியுள்ளனர் என சமூக வலைத்தளங்களில் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்ற வேண்டும் என தொல். திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.