எனக்கே இந்த கதின்னா..மற்றவர்களுக்கு? - விஷால் பேட்டி

புதன், 6 டிசம்பர் 2017 (10:28 IST)
மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் இதுதான் கதியா என நடிகர் விஷால் வேதனை தெரிவித்துள்ளார்.


 
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்பு நிராகரிக்கப்பட்டதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அதன் பின், விஷாலை முன் மொழியாத 2 பேரின் பெயர் வேட்பு மனுவில் இடம் பெற்றிருப்பதாக கூறி அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
 
அதன்பின் விஷால் தேர்தல் அதிகாரியிடம் சென்று கையெழுத்திட்ட இரண்டு பேரையும் சில அதிமுகவினர் மிரட்டியதற்கான ஆடியோ ஆதாரங்களை வழங்கி முறையிட்டார். அதன் பின் இரவு 8.30 மணியளவில் அவரின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
அந்நிலையில், திடீர் திருப்பமாக இரவு 11 மணியளவில் அவரின் வேட்பு மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இரு நபர்கள் நேரில் வந்து வேட்புமனுவில் கையெழுத்து இடவில்லை எனக் கூறியதால், விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
 
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த விஷால் “ ஆர்.கே நகரில் போட்டியிட்ட பல சுயேட்சை வேட்பாளர்களில் நானும் ஒருவர் என நினைத்தேன். ஆனால், இத்தனை சிக்கல், பிரச்சனை இருக்கும் என எதிர்பார்க்கவில்லை.
 
சினிமாவில் வருவது போல் திருப்பம் மேல்  திருப்பமாக இருக்கிறது. ஏன் இப்படி நடக்கிறது எனத் தெரியவில்லை. வேட்பாளர் இல்லாத நேரத்தில் மனுவை நிராகரிப்பது சரியல்ல. விஷால் நிற்கக்கூடாது என முடிவெடுத்து விட்டார்கள். அதுதான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம்.
 
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால் இதுதான் கதியா? விஷாலுக்கே இந்த கதி என்றால் சாதாரண சுயேட்சை வேட்பாளர்களுக்கு என்ன கதி எனத் தெரியவில்லை.
 
இதனால் நான் சும்மா இருக்கப்போவதில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என விரும்பும் ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து, அவரை வெற்றி பெற வைப்பேன்” என விஷால் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்