அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வரும் தினகரன், உள்ளாட்சி தேர்தல் வருவதால் தனிக்கட்சி தொடங்கலாமா என்ற குழப்பத்தில் உள்ளார். இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் கைப்பற்றியதின் மூலம் அதிமுக கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால் தினகரன் அதிமுகவில் சேர முடியாமல் வெளியில் இருந்து தனது ஆதரவாளர்களை வைத்து அரசியல் செய்து வருகிறார். இந்நிலையில் ஆர்கே நகர் இடைர்த்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன் அடுத்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆலோசித்து வருகிறார்.
ஆனால் உள்ளாட்சி தேர்தலுக்கு தனி சின்னம் வேண்டும் என்பதற்காக தினகரன் கட்சி ஒன்றை ஆரம்பிக்கலாமா என குழப்பத்தில் உள்ளார். ஏற்கனவே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் தினகரன் தொடங்க உள்ள புதிய கட்சியில் சேர்ந்தால், எந்தவித சிக்கலும் இல்லாமல் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என அறிவிக்கப்பட்டுவிடுவார்கள்.
இதனால் அச்சத்தில் உள்ள அவர்கள், தினகரன் கட்சி ஆரம்பித்தால் அதில் சேரமாட்டோம் என தொடர்ந்து கூறி வருகின்றனர். ஏற்கனவே தங்க தமிழ்ச்செல்வன் தினகரன் கட்சியில் சேரமாட்டோம் என கூறியிருந்தநிலையில் தற்போது வெற்றிவேலும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல், தற்போதைய சூழலில் தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் அதில் சேரமாட்டோம். வெளியில் இருந்து அவருக்கு ஆதரவாகப் பணி செய்வோம். நாங்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தினகரன் கட்சியில் இணைந்தால் பதவி பறிபோகும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம் என கூறினார்.