வேங்கை வயல் வழக்கு குறித்து குற்றப்பத்திரிகை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டு உள்ளதாகவும், ஆனால் அதே நேரத்தில் இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்த நிலையில், சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை ஏற்று கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த வழக்கில் வன்கொடுமை சட்டப்பிரிவு இல்லை என்பதால், வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திலிருந்து வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மூன்று பெயர்களை குறிப்பிட்டு, சிபிசிஐடி காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், அந்த குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என்று வேங்கை வயல் மக்கள் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த குற்றப்பத்திரிகை ஏற்கப்படுவதாக நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என சிபிசிஐடி ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனு ஏற்கப்பட்டு, இவ்வழக்கு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.