இன்று சந்தன வீரப்பன் நினைவு நாள் - நினைவேந்தல் சுவரொட்டியால் பரபரப்பு

சனி, 18 அக்டோபர் 2014 (18:15 IST)
இன்று சந்தன வீரப்பனின் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு மாவட்டத்தில் நினைவேந்தல் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ள சம்பவம், இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் சந்தன வீரப்பன் என்றால் தெரியாத நபர்கள் யாரும் இருக்க முடியாது. சந்தன வீரப்பன் தன் கூட்டாளிகளுடன் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வனப் பகுதியில் முகாமிட்டு, காட்டு யானைகளைக் கொன்று தந்தம் திருடுவது மற்றும் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்துவது உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் சந்தன வீரப்பன் மற்றும் கூட்டாளிகளைப் பிடிக்க, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்கள் சிறப்பு அதிரடிப் படை நியமித்து, தீவிரமாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
 
சந்தன வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் முக்கிய பிரமுகர்களைக் கடத்தி வைத்து, அரசிடம் பணம் பெறுவது, அரசு பணியவில்லை என்றால் கடத்தப்பட்ட நபரைக் கொலை செய்வது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கொலை செய்த பின்னர், சந்தன வீரப்பனைப் பிடிக்க இரு மாநில கூட்டு அதிரடிப் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
 
இந்த நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் குழுவினரை அப்போதைய தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையின் தலைவர் கே.விஜயகுமார் தலைமையில் அதிரடிப் படையினர் சுட்டுக் கொன்றனர். 
 
அக்.18 ஆன இன்று, வீரப்பன் நினைவு தினம் ஆகும். இதை முன்னிட்டு ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் எல்லை காத்த மாவீரன் வீரத் தமிழன் வீரப்பனார் நினைவைப் போற்றுவோம் எனச் சுவரொட்டி அடித்து ஒட்டப்பட்டுள்ளது. இது, பொதுமக்களிடையிலும் போலீஸ் தரப்பிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்