ம. தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதுரையில் நடைபயணத்தைத் தொடங்கியபோது, அவருடன் நடைப்ப்பயணம் சென்று கொண்டிருந்த மதிமுக தொண்டர் ஒருவர் திடீரென தீக்குளித்து பலியானார். இந்த அதிர்ச்சி செய்தியே இன்னும் மதிமுகவினர் மனதில் வருத்தத்தை வரவழைத்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மேலும் ஒரு மதிமுக தொண்டர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீக்குளித்துள்ளார். வைகோவின் நெருங்கிய உறவினரான இவர் தற்போது உயிருக்கு ஊசலாடுவதாக கூறப்படுகிறது
விருதுநகரை சேர்ந்த சரவண சுரேஷ் என்பவர் மதிமுகவின் தீவிர தொண்டர் மட்டுமின்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் உறவினர் ஆவார். 50 வயதான இவர் இவர் இன்று விருதுநகரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திடீரென தீக்குளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மதிமுக தொண்டர்கள் உடனடியாக அவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சரவணன் சுரேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல் தீக்காயத்தால் 80 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.