இந்திக்கு மறைமுக ஆதரவு: தமிழக ஆளுனருக்கு வைகோ கண்டனம்!

வியாழன், 27 ஜனவரி 2022 (13:50 IST)
இந்தி மொழிக்கு தமிழக கவர்னர் கே.என்.ரவி  அவர்கள் மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கண்டனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
நாட்டின் 73 ஆவது குடியரசு நாள் விழாவை ஒட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் விடுத்திருந்த வாழ்த்துச் செய்தியில் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் விடுதலை வீரர்கள், தலைவர்களின் பங்களிப்பை நினைவு கூர்ந்து இருந்தார். தமிழக அரசின் பணிகளை பாராட்டியுள்ள ஆளுநர், பல்வேறு துறைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில், பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், எடுத்துக்காட்டாகவும் தமிழ்நாடு இருக்கிறது என்பதையும் தமது அறிக்கையில் ஆளுநர் சிறப்பித்து கூறி இருக்கின்றார்.
 
ஆனால், ஆளுநரின் அறிக்கையை முழுமையாக ஆழமாக உள்வாங்கினால்தான் தெரிகிறது, பூவினூள் வாசம் போல் பொதிந்திருக்கும் கருத்துக்கள், ஒன்றிய பாஜக அரசின் செயல்பாடுகளையும், அதற்கு பின்னணியில் இருந்து இயக்கி வரும் கோட்பாடுகளையும் உயர்த்திப் பிடிக்கும் வகையில் இருக்கின்றது என்பது; அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் என்பவர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர்.
 
எந்த தத்துவத்தின் சாயலும் ஆளுநர் மீது படர்ந்து விடலாகாது; ஆனால் தமிழ்நாட்டு ஆளுநரின் வாழ்த்துச் செய்தி அந்த எல்லைகளை கட்டறுத்து தாண்டி இருப்பதை ஏற்க முடியாது. உலகப் பொதுமறை 'திருக்குறளை' வேத சட்டகத்தினுள் அடைக்க முயற்சிப்பதையும் தமிழர்கள் வேடிக்கைப் பார்க்க மாட்டார்கள்.
 
மருத்துவப் படிப்புகளுக்கு 'நீட்' கட்டாயம் என்பதை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமுன்வரைவு நிறைவேற்றி, அதனை ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. முதலமைச்சர் நேரில் சென்று வலியுறுத்தியும் கூட ஆளுநர் 'நீட்' விலக்கு சட்ட முன்வரைவுக்கு இசைவு அளித்து ஒன்றிய அரசின் பரிந்துரைக்கு அனுப்பவில்லை. இந்நிலையில் 'நீட்' தேர்வு அவசியம் என்று பொருள்படும்படி மேலோட்டமாக ஆளுநர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
 
பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இருமொழிக் கொள்கை தீர்மானத்தை அரை நூற்றாண்டு காலமாக தமிழ்நாடு கடைபிடித்து வரும் நிலையில், தமிழக மாணவர்கள் இன்னொரு மொழியை கற்க வேண்டும் என்று, இந்தி மொழிக்கு மறைமுகமாக வக்காலத்து வாங்குவதையும், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான அறிவுறுத்தலையும் ஆளுநர் வழங்கி இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்