முதல்வருக்கு அமித்ஷா அனுப்பிய இரங்கல் கடிதம்: வைகோ கண்டனம்

புதன், 14 அக்டோபர் 2020 (19:31 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் நேற்று காலமான நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் முதல்வர் தாயார் மறைவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த இரங்கல் கடிதம் இந்தியில் இருந்ததுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியில் கடிதம் எழுதி இருக்கின்றார். இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடுமை; இந்தி வெறி ஆணவத்தின் உச்சகட்டம். சகித்துக் கொள்ள முடியாது. 
 
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.  அண்மைக்காலமாக தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நடுவண் அமைச்சர்கள் இந்தியில்தான் கடிதங்கள் எழுதி வருகின்றார்கள். தங்களுடைய முகநூல், ட்விட்டர் போன்ற வலைதளப் பக்கங்களிலும், இந்தியில் மட்டுமே எழுதி வருகின்றார்கள். இந்தப் போக்கு தமிழுக்கு மட்டும் அல்ல, அனைத்து இந்திய மொழிகளுக்கும் எதிரானது.  
 
எங்கள் ஆட்சி, இந்திக்காரர்களுக்கு மட்டும்தான் என்பதைக் காட்டுகின்றது. எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்; தமிழர்களின் உணர்வுகளை மதிக்க மாட்டோம்; நாங்கள் சொல்வதைத்தான் தமிழர்கள் கேட்க வேண்டும்; நாங்கள் எழுதுவதைத்தான் தமிழர்கள் படிக்க வேண்டும் என்கின்ற இந்தி ஆதிக்க வெறி மனப்பான்மை, இந்தியாவைக் கூறுபோட்டு விடும் என்பதை, பாஜக ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  
 
எனக்கு இந்தி தெரியாது; எனவே, உங்கள் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதி அனுப்புங்கள் என்று கூறி, அந்தக் கடிதத்தை, எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இல்லையேல், இனி அவர் அனைத்துக் கடிதங்களையும் இந்தியில்தான் எழுதி அனுப்புவார். அதைத் தடுத்து நிறுத்த வேண்டியது, தமிழக முதல் அமைச்சரின் கடமை. 
 
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்."

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்