தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நடிகர் தற்போது அரசியல்வாதி என பல அவதாரங்களை எடுத்துகொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, திமுகவிற்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் உதயநிதி. தேர்தலில் 38 இடங்களில் அமோக வெற்றி பெற்றது திமுக.
இதனைத் தொடர்ந்து இந்த வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்ததற்காக, பல வருடங்களாக தான் பதிவியேற்றிருந்த இளைஞரணி செயலாளர் பதவியை திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதிக்கு அளித்தார். இதை அடுத்து இளைஞர் அணி செயலாளராக பல முக்கியமான கூட்டங்களை நடத்தி வரும் உதயநிதி, கள அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று சென்னையில், திமுக இளைஞர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதற்கு தலைமை தாங்கிய உதயநிதி ஸ்டாலின், அந்த நிகழ்வைக் குறித்து பல புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து தனது திமுக கட்சி இளைஞர் அணி உறுப்பினர்களுடன் ஒரு செல்ஃபி புகைப்படத்தை அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த பதிவில், ”குடும்ப அரசியல் என்பார்கள், ஆம் இது தான் என் குடும்பம்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு, ”திமுக குடும்ப அரசியல் கட்சி” என விமர்சித்து வரும் அதிமுக, பாஜக ஆகியோருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பகிரப்பட்ட பதிவு என கூறப்படுகிறது.