உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் உதயநிதி அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் போன்ற ஆதரவு குரல்கள் திமுகவிற்குள் ஒலிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் எங்கு திமுக நிகழ்ச்சிகள் நடந்தாலும் அங்கு உதயநிதி படத்துடன் இளைஞரணியினர் போஸ்டர்கள், பேனர்களை அமைக்கின்றனர். அதில் பல்வேறு பட்டப்பெயர்களையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். முக்கியமாக மூன்றாவது கலைஞர் என்ற பெயர் ரொம்ப பேமஸாக உள்ளது.
இதனைத்தொடர்ந்து தன்னை பல்வேறு பட்டப்பெயர்கள் சொல்லி அழைப்பது குறித்து கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்த உதயநிதி ஸ்டாலின், தன்னை மூன்றாவது கலைஞர், இளம் தலைவர் போன்ற பெயர்களில் அழைக்க வேண்டாம் என்றும் இனி சின்னவர் என்று அழைத்தாலே போதும் என்றும் கூறியிருந்தார். இது கேலி கிண்டலுக்கு உள்ளானது.
இதனிடையே தனது சமீபத்திய பேட்டியில், இளைஞர் அணி செயலாளராக 3 ஆண்டுகள் முடித்து 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறேன். இன்னும் பயணம் செய்ய வேண்டிய தூரம் மிக மிக அதிகம். நான் யாரையும் சின்னவர் என்று அழைக்க சொல்லவில்லை. இருக்கிற பிரச்சனைகள் போதாதா?
என் மீதுள்ள அன்பால் மூன்றாம் கலைஞர் என என்னை அழைக்கின்றனர். என்னை பொருமைப்படுத்துவதாக நினைத்து கலைஞரை சிறுமைப்படுத்துகின்றனர். கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டுமே. ஒரே கலைஞர் தான். உங்கள் வயது, அனுபவம் ஆகியவற்றிக்கு நான் சின்னவன். யாரையும் நான் இப்படி கூப்பிட வேண்டும் என சொல்லவில்லை என தெரிவித்துள்ளார்.