சமீப காலமாக கடவுள் மறுப்பாளர்களுக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் வாக்குவாதங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றில் கந்தசஷ்டி கவசம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து யுட்யூப் சேனல் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனால் கடவுள் மறுப்பு பேசி வரும் திராவிட இயக்கங்களுக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் சமூக வலைதளங்களில் மோதல் எழுந்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின், வள்ளுவர்- அம்பேத்கரை தனதாக்கும் முயற்சி, நோட்டாவிடம் போட்டி என தொடர் தோல்விக்கு பெரியாரே காரணம் என்பதால் அவரின் சிலையை அவமதித்துள்ளனர். ஈராயிரம் ஆண்டுகால சமூக அழுக்கை வெளுத்தெடுத்தவர் மறைந்தும் உங்களை நிம்மதியிழக்க செய்கிறார் என்பதில் அடங்கியுள்ளது அவரின் வெற்றி எங்களின் வரலாறு.
பெரியாரின் சிந்தனைகளை வெல்ல முடியாத கோழைகள் இருட்டில் அவர் சிலையோடு மோதுவதும், அதனை ஆமாஞ்சாமி அடிமை அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது. மனிதக்குலம் மானமும், அறிவும் பெற உழைத்த பெரியாரைச் சீண்டுவதைச் சூழ்ச்சியால் வயிறு கழுவும் கும்பல் நிறுத்திக்கொள்ள வேண்டும் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.