அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மருத்துவர் பாலசுப்ரமணியன். கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவ பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கட்டிடம் ஒன்று கட்ட லோன் வாங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக தான் பல ஆண்டுகளாக வங்கி கணக்கு வைத்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லோன் வாங்குவதற்காக சென்றுள்ளார்.
அந்த வங்கியின் மேனேஜரான வட இந்தியாவை சேர்ந்த விஷால் படேல் என்பவர் மருத்துவரிடம் இந்தி தெரியுமா என கேட்டுள்ளார். தனக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரியும் என மருத்துவர் பதில் அளித்துள்ளார். மருத்துவரிடம் லோன் பெறுவதற்கு அனைத்து ஆவணங்களும் இருந்தபோதும் அவற்றை எடுத்துக்கூட பார்க்காமல் தொடர்ந்து மொழி தொடர்பான காழ்ப்புணர்ச்சி கருத்துகளை பேசிய மேனேஜர் லோன் தரமுடியாது என பாலசுப்ரமணியத்தை திரும்ப அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் பாலசுப்ரமணியம் வங்கி மேனேஜர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் திமுக இளைஞர் அணி உதயநிதி ஸ்டாலின், முதுகெலும்பற்றவர்கள் ஆட்சி செய்வதால் தமிழர்கள் எல்லோரும் அப்படியே இருப்பார்கள் என்ற எண்ணத்தை வடக்கிலிருந்து வருபவர்கள் மாற்றிக்கொள்வது அவசியம். இந்தி திணிப்பை எதிர்த்து நின்ற ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
தமிழர் தொடங்கியது ஐ.ஓ.பி வங்கி - தமிழர் பெருமையான கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அதன் கிளையில் கடன்பெற இந்தி அவசியமாம். சம்பந்தப்பட்ட இந்தி வெறி அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகப் பணிகளுக்குத் தமிழர்களையே பணியமர்த்த வேண்டும் என ட்விட் போட்டுள்ளார்.