கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள், மருந்துகள் இருப்பு குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு நேரில் சென்று அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். அப்போது தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகையை, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எ.வ.வேலு, விஷச் சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார். முதலமைச்சர் சார்பில் அமைச்சர் உதயநிதி, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாகவும், இந்த சம்பவத்தை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை எனவும் அமைச்சர் கூறினார்.
விஷச்சாராய விற்பனை தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது என்றும் வரும் நாட்களில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு கூறினார். சிபிசிஐடி விசாரணையில் கண்டறியப்படும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.