டாஸ்மாக்கில் மது குடித்த இருவர் திடீர் பலி! – திருச்சியில் அதிர்ச்சி!

ஞாயிறு, 18 ஜூன் 2023 (09:43 IST)
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தச்சன்குறிச்சியை சேர்ந்தவர்கள் கொத்தனார் முனியாண்டி மற்றும் கூலி தொழிலாளி சிவக்குமார். இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது அருந்துவதை பழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறாக நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் ஒன்றில் இருவரும் சேர்ந்து மது அருந்தி வீடு திரும்பியுள்ளனர்.

அதில் முனியாண்டிக்கு திடீர் வயிற்றுபோக்கு ஏற்படவே உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து லால்குடி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை அளித்தும் அவர் நிலை மோசமடைந்து வந்ததால் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல அவருடன் மது அருந்திய சிவக்குமாரும் விடிந்த பிறகும் எழுந்திரிக்காமல் இருந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்துள்ளார். டாஸ்மாக் மது குடித்த இருவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்