பருவம் தப்பி பெய்த கனமழையால் உப்பள தொழிலாளர்கள் பாதிப்பு: டிடிவி தினகரன்..
செவ்வாய், 11 ஜூலை 2023 (12:01 IST)
பருவம் தப்பி பெய்த கனமழையால் உப்பள தொழிலாளர்கள் பாதிப்பு என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பருவம் தப்பி பெய்த கனமழை காரணத்தினால் உப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கனமழை காரணமாக உப்பு பாத்திகளில் இருந்து உப்பு அறுவடை செய்ய முடியாததால் உப்பளத்தை சார்ந்த சிறு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மட்டுமின்றி, சரக்கு லாரிகளை நம்பி இருக்கும் ஓட்டுநர்கள், தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, பயிர்காப்பீடு போல உப்பள காப்பீடு திட்டம் செயல்படுத்தி இத்தொழிலை நம்பியுள்ள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட உப்பளங்களை முழுமையாக மதிப்பீடு செய்து உப்பள உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன் வாழ்வாதாரம் இழந்துள்ள உப்பள தொழிலாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.