ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்கிறது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையேல் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் பலமுறை எச்சரித்தும் போராட்டத்தை ஊழியர்கள் கைவிடவில்லை. தங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அரசு தரப்பில் பேசவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அரசு தரப்போ அதை ஏற்க மறுத்து வருகிறது.
இந்நிலையில், ரூ.55 ஆயிரமாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி, அதாவது, ரூ. 1 லட்சத்து 5 ஆயிரமாக மாற்றும் மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதுவும், ஜூலை 2017 முதல் முன் தேதியிட்டு இந்த சம்பள உயர்வு அளிக்கப்படவுள்ளது. இந்த உயர்வின் காரணமாக, அரசுக்கு மாதம் ரூ.25.32 கோடி செலவு அதிகரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அப்போது, போக்குவரத்து ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நிதி இல்லை என தமிழக அரசு கூறும் போது இந்த ஊதிய உயர்வு தேவையா என கருத்து தெரிவித்த திமுக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் தினகரன் ஆகியோர் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.