ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் நடந்த பல்வேறு இடையூறு காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஆர்.கே நகர் இடைத்தேர்தல் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மனுசூதனனை, சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து இமாலய வெற்றி பெற்றார்.
இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.ராமமூர்த்தி என்பவர் ஆர்.கே நகரில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரான டி.டி.வி தினகரன், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றிருக்க முடியாது எனவும் குக்கர் சின்னம் ஒதுக்கிய பிறகு ஆர்.கே.நகரில் அதிக அளவில் குக்கர்கள் கிடைக்கப்பெற்றுள்ளது என கூறியுள்ளார்.
மேலும் ஆர்.கே நகரில் 30 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே தினகரன் வெற்றி பெற்றது செல்லாது என தீர்பளிக்கக் கோரியும் தினகரன் சட்டபேரவைக்கு செல்ல தடை விதிக்க வேண்டியும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி தொடர்ந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் வழக்காக விசாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.