சட்டப்பேரவையில் ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் கைக்குலுக்கி பேசிக்கொண்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
2020 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று துவங்கியது. இது 15வது சட்டப்பேரவையின் 8வது கூட்டத்தொடர். மேலும் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கூட்டத்தொடர் துவங்கியது.
கூட்டத்தொடர் விவாதத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றக்கோரி தீர்மானம் விவாதிக்க அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்கவே திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் தனது அறைக்கு திரும்புவதற்காக சட்டப்பேரவை வளாகம் நோக்கி அவர் செல்ல, அப்போது சட்டப்பேர்வையிலிருந்து வெளிநடப்புச் செய்து வெளியே வந்தார் டிடிவி தினகரன். எதிரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டதும் டிடிவி தினகரன் வணக்கம் என்று சொன்னார்.
இதை சற்றும் எதிர்பாராத ஸ்டாலின் வணக்கம் என்று பதிலுக்கு தெரிவித்து டிடிவி கையைப்பிடித்து குலுக்கி புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்தார். இதற்கு பதிலுக்கு டிடிவி தினகரனும் புத்தாண்டு வாழ்த்துகள் என சொல்லிவிட்டு நகர்ந்தார்.