அதிமுக பிளவு, சசிகலா தண்டனை ஆகியவற்றால் புதிதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார் தினகரன். தனது ஆதரவாளர்களுடன் ராஜாவாக இருந்த தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சி, திமுக ஆகியவற்றைத் தோற்கடித்து நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்தார்.
இதை தொடர்ந்து அவரது கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் சிலர் திமுக, அதிமுக கட்சிகளில் போய் சேர்ந்து கொண்டனர். இருந்தாலும் நம்பிக்கையை கை விடாத தினகரன் உள்ளாட்சி தேர்தல்களில் டெல்டா மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பு பெற வேண்டும் என உற்சாகமாக களத்தில் இறங்கினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு செய்து கட்சியை மேம்படுத்த புதிய நிர்வாகிகளை நியமித்தார் டிடிவி தினகரன்.
அதில்தான் தற்போது பிரச்சினை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அமமுக நிர்வாகியோடு அந்த பகுதி அமமுக உறுப்பினர்கள் பலருக்கு ஒவ்வாத தன்மை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது அதிகாரத்தின் கீழ் இயங்க விரும்பாத முக்கிய நிர்வாகிகள் உட்பட 40 உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.