செண்ட்ரல் வராமல் அரக்கோணத்தில் இருந்தே புறப்படும் ரயில்! - அரக்கோணம் செல்ல சிறப்பு பேருந்துகள்!

Prasanth K

ஞாயிறு, 13 ஜூலை 2025 (18:19 IST)

திருவள்ளூரில் சரக்கு ரயில் விபத்து ஏற்பட்டதால் இருப்புப்பாதை சேதமடைந்துள்ள நிலையில் செண்ட்ரலில் இருந்து கிளம்ப வேண்டிய ரயில் அரக்கோணத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

திருவள்ளூரில் டீசல் டேங்கர்கள் கொண்ட சரக்கு ரயில் கவிழ்ந்து தீ விபத்து ஏற்பட்ட நிலையில் காலை முதலாக மின்சார ரயில்கள் மற்றும் அந்த வழித்தடத்தில் செயல்படும் ஏராளமான வெளிமாநில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுவிட்ட நிலையில், சரக்கு ரயிலில் மீதமுள்ள டீசலை டேங்கர் லாரிகளில் நிரப்பி அனுப்பும் பணிகளும், இருப்புப்பாதையை சரி செய்யும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

 

இதற்கிடையே சென்னை செண்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு இன்று மாலை 5.30 மணிக்கு செல்ல இருந்த சதாப்தி விரைவு ரயில் அரக்கோணத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் செண்ட்ரல் - அரக்கோணம் இடையே இந்த ரயில் ரத்து செய்யப்படுவதாகவும், அதனால் அரக்கோணத்தில் இருந்து ரயில் புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

 

செண்ட்ரல் - அரக்கோணம் இடையே மின்சார ரயில்கள் ரத்தாகியுள்ள நிலையில் பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பாக காட்பாடி, குடியாத்தம், அரக்கோணம், திருவள்ளூர், மற்றும் திருத்தணி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து மாலை 04:00 மணி நிலவரப்படி 265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

மேலும் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக, பயணிகள் வசதிக்காக திருவள்ளூர் பேருந்து நிலையம் - ஆவடி மற்றும் திருவள்ளூர் பேருந்து நிலையம் - பூந்தமல்லி இடையே பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக தற்போது வரை தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்