திருப்பூர் முழுவதும் பேனர் வைத்த தேமுதிக: போராட்டம் செய்த டிராபிக் ராமசாமி

திங்கள், 16 செப்டம்பர் 2019 (07:45 IST)
பேனர் கலாச்சாரம் ஒழிய வேண்டும் என்றும் பேனர் கலாச்சாரத்தை தொடங்கி வைத்ததே திமுக தலைவர் முக ஸ்டாலின் என்றும் நேற்று திருப்பூரில் நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழாவில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். ஆனால் இந்தக் கூட்டத்தில் அவரது கட்சி தொண்டர்கள் திருப்பூர் முழுவதும் பேனர்கள் வைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என தமிழக அரசியல்வாதிகள் கூறி வந்தாலும் அது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்பதையே இந்த நிகழ்ச்சி காட்டியுள்ளது. சென்னையில் பேனர் விழுந்ததால் இளம்பெண் பலியான சம்பவத்தை அடுத்தும் அரசியல் கட்சிகள் பேனர்களை தொடர்ந்து வைத்து கொண்டிருப்பது நீதிமன்ற உத்தரவை அவதூறு செய்வது போல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் 
 
 
நேற்று நடைபெற்ற தேமுதிக 15ஆம் ஆண்டு துவக்க விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களை வரவேற்க திருப்பூரில் உள்ள முக்கிய சாலைகளில் பிளக்ஸ் பேனர்களை அக்கட்சியினர் நேற்று முன்தினமே வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த டிராபிக் ராமசாமி, இந்த பேனர்களை பார்த்ததும் உடனே அவற்றை அகற்ற வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானப்படுத்தி அவருக்கு முன்னரே ஓரிரண்டு பேனர்களை மட்டும் அகற்றினார். இருப்பினும் டிராபிக் ராமசாமி அந்த பகுதியில் இருந்து சென்ற உடன் பேனர்கள் மீண்டும் வைக்கப்பட்டதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர் 
 
 
ஒரு சில இடங்களில் போலீசார் எச்சரித்ததால் இரவோடு இரவாக பேனர்கள் அகற்றப்பட்டாலும் பல இடங்களில் விழா முடியும் வரை பேனர்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பிளக்ஸ் பேனர்கள் வைத்தது தொடர்பாக திருப்பூர் வடக்கு ஸ்டேஷன் மற்றும் தெற்கு ஸ்டேஷன் ஆகிய காவல் நிலையங்களில் தேமுதிக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்