சென்னை கோட்டூர் புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஆராய்ச்சி மாணவர்களுக்கு இந்த நூலகம் பெரிதும் பயன்படுவதாக பார்க்கப்படுகிறது.
15க்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கில பருவ இதழ்கள், 20க்கும் மேற்பட்ட செய்திதாள்கள் ஆகியவை இந்த நூலகத்திற்கு வருகின்றன. தற்போது, அவை தொடுதிரை வசதியுடன் மாற்றப்பட்டுள்ளதாக நூலகர் எஸ். காமாட்சி கூறியுள்ளார்.
காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், நூலகத்திலும் இதற்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரல் நுனியில் உலகச் செய்திகளை அறிந்து கொள்ளும் வகையில் தொடுதிரை வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர்கள் இந்த கருவியை மிக எளிதாக பயன்படுத்தலாம். தாங்கள் விரும்பிய நாளிதழ்களை தொடு திரையின் மூலம் வாசிக்கலாம். தற்போது, சோதனை முறையில் ஒரு தொடுதிரை அமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் வரவேற்பை பொறுத்து, கூடுதலாக தொடுதிரைகள் நிறுவப்பட இருப்பதாகவும் நூலகர் காமாட்சி தெரிவித்துள்ளார்.