மூன்று தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை

செவ்வாய், 22 நவம்பர் 2016 (09:34 IST)
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 19-ஆம் தேதியன்று நடந்தது. அவரக்குறிச்சியில் அதிகபட்சமாக 81.86 சதவீதமும், திருப்பரங்குன்றத்தில் 71.04 சதவீதமும், தஞ்சாவூரில் 69.41 சதவீத வாக்குகளும் பதிவாகின.
 



 


மூன்று தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன.

அரவக்குறிச்சியில் பதிவான வாக்குகள் கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியிலும் தஞ்சாவூர் தொகுதியில் பதிவானவை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கலைக் கல்லூரியிலும், திருப்பரங்குன்றம் தொகுதியில் பதிவான வாக்குகள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் வைத்து எண்ணப்பட்டு வருகின்றன.

மூன்று தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், அரவக்குறிச்சியில் 18 சுற்றுகளும், தஞ்சாவூரில் 20 சுற்றுகளும், திருப்பரங்குன்றத்தில் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு மேசையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால், வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் உடனுக்குடன் அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கையை தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்தே உடனடியாக அறிய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் பணியில் 25 பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மேசையிலும் ஒரு வாக்கு எண்ணும் பணியாளர் தவிர அரசு அல்லது பொதுத்துறை நிறுவனத்தைச் சேர்ந்த நுண் பார்வையாளரும் உடன் இருந்து வருகின்றனர்.

வாக்கு எண்ணும் மையங்களுக்குள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், நுண் பார்வையாளர்கள், பிற வாக்கு எண்ணும் பணியாளர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

வாக்கு எண்ணும் செயல்முறைகள் அனைத்தும் விடியோ படம் பிடிக்கப்பட்டு வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்