குவியும் புகார்கள் ; காத்திருக்கும் காவல்துறை: ஹெச்.ராஜா மீது குண்டாஸ்?

செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (11:28 IST)
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது புகார் கொடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
பொதுவாக எப்போதும் சர்ச்சையான கருத்துகளை கூறி வருபவர் ஹெச்.ராஜா. ஆனால், பிரச்சனை பூதாகரம் ஆனால், அது அட்மின் போட்டது, நான் பேசியதை யாரோ எடிட் செய்து, டப்பிங் செய்து வெளியிட்டு விட்டனர் எனக்கூறி எஸ்கேப் ஆவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
 
ஆனால், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதிக்கப்பட்ட போது முதல்வர் காவல்துறை மற்றும் நீதிமன்றம் குறித்து அவதூறாக அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு, அவரை கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.
 
ஆனால், முதல்வர் மற்றும் காவல் துறை அதிகாரி குறித்து விமர்சித்து பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே, அவரைப்போலவே, ஹெச்.ராஜாவையும் கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

 
அதுபோக, காவல் நிலையங்களில் ஹெச்.ராஜா மீது அளிக்கும் புகார்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பல வழக்கறிஞர்கள் தொடுத்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் கனிமொழி எம்.பி. குறித்து ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய  கருத்தை பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து திமுக சார்பில் பலரும் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கிடப்பில் போடப்பட்ட அந்த புகார்களை தற்போது காவல்துறை தூசி தட்ட தொடங்கியுள்ளது. 
 
மேலும், கடந்த 2ம் தேதி சென்னை வல்ளுவர் கோட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா, திட்டக்குடி சிட்டிங் எம்.பி. அருண்மொழித்தேவன் 200 ஏக்கர் கோவில் நிலத்தை அபகரித்துள்ளார் என புகார் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து  தன் மீது ஹெச்.ராஜா வீண் பழி சுமத்துவதாக கூறி அருண்மொழி தேவன் புகார் அளித்துள்ளார். இதன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
நீதிமன்றத்தை அவதூறாக பேசிய புகாரில், 4 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி ஹெச்.ராஜா நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் விளக்கம் அளிக்கும் வரை தமிழக அரசு காத்திருக்கும் எனவும், அதன்பின் ஹெச்.ராஜா குண்டாஸ் பிரிவின் கீழ் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்