இந்த திட்டத்தினால் 1000 கிணறுகள், 100க்கும் மேற்பட்ட ஏரி, குளம் குட்டைகள் அழிக்கப்பட இருக்கிறது. மேலும், 20க்கும் மேற்பட்ட பள்ளிகள், கோவில்கள், 8 ஆயிரம் வீடுகள் இடிக்கப்பட இருக்கிறது. இந்த சாலைப் பணிக்காக 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் மற்றும் 500 ஏக்கர் வனப்பகுதியும் அழிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை எதிர்க்கும் சமுக ஆர்வர்கள் மற்றும் விவசாயிகள் என அனைவரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
ஒருபக்கம் எதிர்ப்பு கிளம்பினாலும், இதற்கான பணிகளை அரசு அதிகாரிகள் போலீசாரின் துணை கொண்டு செய்து வருகிறார்கள். பல பகுதிகளில் நிலங்கள் அளக்கப்பட்டு, கற்கள் நடப்பட்டு வருகிறது. ஆனாலும், அதிகாரிகள் செல்லும் இடம் எங்கும் விவசாயிகள் கடும் எதிப்பும், கண்ணீர் மல்க கோரிக்கையும் வைத்து வருகின்றனர். சிலர் அதிகாரிகள் நடும் கற்களை பிடுங்கி எறிந்து விடுகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பசுமை வழிசாலை அமைப்பதற்காக, தேத்துறை அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்கள் தரையில் அமர்ந்து தேர்வு எழுதிக்கொண்டிருந்த போது, வருவாய்துறையினர் நவீன கருவிகள் மூலம் நில அளவீடு செய்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
அந்த பள்ளி வழியே சாலை செல்வதால் அந்த பள்ளி இடிக்கப்படும் எனத் தெரிகிறது. அதன் பின் அங்கு அதிகாரிகள் கல்லை நட்டு விட்டு சென்றனர். இது அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.