தீபாவளிக்கு வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு : சென்னையில் மூன்று இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்

புதன், 14 செப்டம்பர் 2016 (12:38 IST)
தீபாவளிக்காக, எராளமானோர் வெளியூர் செல்லும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, சென்னையில் மூன்று இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். எனவே தொடர்ச்சியாக சில நாட்கள் விடுமுறை மற்றும் தீபாவளி, பொங்கல் விடுமுறை நாட்களில் ஏராளமானோர் ஒரே நேரத்தில் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல முயலும்போது அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 
 
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வண்டலூரை தாண்டவே சில மணி நேரங்கள் ஆகிவிடுகிறது. இதனால் பயணிகளும், பேருந்து ஓட்டுனர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். 
 
இதுபற்றிய ஆலோசனைக் கூட்டம், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது சென்னையில் வடக்கு, மேற்கு, தெற்கு என பிரித்து மூன்று இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அதாவது, தென் மாவட்டங்களுக்கு செல்லும் 40 சதவீத பேருந்துகள் வண்டலூர் அல்லது கூடுவாஞ்ச்சேரியில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை பகுதி மற்றும் மாதவரத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்