இன்று ஒரு நாள் அவை ஒத்தி வைக்கப்பட்டதற்கு காரணம் என்ன?

புதன், 3 பிப்ரவரி 2021 (15:03 IST)
மறைந்த வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி.பி, மருத்துவர் சாந்தா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின்  மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்று ஒரு நாள் அவை ஒத்தி வைக்கப்பட்டது. 

 
2021 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் கூடியது. மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிவேல், யசோதா ஆகிய 22 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு இரண்டு மணித்துளிகள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 
 
அதனைத் தொடர்ந்து மறைந்த வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைவரிடம் எளிமையாகவும் கட்சி பாகுபாடின்றி பழகியவர் துரைக்கண்ணு என சபாநாயகர் புகழாரம் சூட்டினார். அடுத்ததாக பாடகர் எஸ்.பி.பிக்கு இரங்கல் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.  
 
பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புரிந்தவரும் மாநில, மத்திய அரசுகளிடமிருந்து பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார் எனவும் சபாநாயகர் பெருமை படுத்தி பேசினார். அடுத்ததாக புற்றுநோய் நிபுணர் சாந்தா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 
சாந்தா மறைவு மருத்துவத்துறைக்கும் தமிழகத்திற்கும் மிகப்பெரிய இழப்பு எனவும் கூறிய சபாநாயகர் இவர்களின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ஒரு நாள் அவை முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்