தமிழகமெங்கும் தேர்தல் நெருங்குவதால் திமுக, மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் கிராம சபைக் கூட்டங்களை அதிகளவில் நடத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு கொரோனாவைக் காரணம் காட்டி அந்த கூட்டங்கள் நடக்க அனுமதி மறுத்துள்ளது. இது எதிர்க்கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஓ பன்னீர்செல்வம் அதற்குப் பதிலளித்துள்ளார். அதில் கிராமசபைக் கூட்டங்களை மாவட்ட ஆட்சியர்தான் நடத்த வேண்டும். அந்த கூட்டங்களை நடத்த ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின், நடப்பது அதிமுக ஆட்சியாக இருந்தாலும், திமுக சொல்வது தான் தற்போது நடந்துக்கொண்டிருக்கிறது. அரசாங்கம் தான் கிராம் சபை கூட்டத்தை கூட்ட வேண்டும், அதனை மறுக்கவில்லை. ஆனால், அரசாங்கம் கிராம சபையை கூட்டாததால் நாங்கள் கூட்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.