விஜயகாந்த் முதலமைச்சர் ஆவதற்கு இந்த தகுதி போதாதா? - திருமாவளவன் கேள்வி
சனி, 7 மே 2016 (14:52 IST)
கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொண்டதே தகுதி தான். ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பதே விஜயகாந்த் முதலமைச்சர் ஆவதற்கு தகுதி தான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
பொன்னேரி (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பொன்னேரியில் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய திருமாவளவன், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, தமாகா, தேமுதிக கட்சியினருக்கு ஆட்சி அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படும்.
தமிழக அரசியல் களத்தில் இது முற்றிலும் மாறுபட்ட தேர்தல். அதிமுக, திமுக இருமுனை போட்டி மட்டுமே 50 ஆண்டுகளாக நிகழ்கிறது. இதற்கு எதிராக தமிழகத்திற்கு மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
மதுவிலக்கை படிப்படியாக குறைப்போம் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்துள்ளார். நிச்சயமாக அவரால் கொண்டு வர முடியாது. மக்கள் நல கூட்டணியால் மட்டுமே மது, ஊழலை ஒழிக்க முடியும். அதிமுக, திமுகவால் ஊழலலையும், மதுவையும் ஒழிக்கவே முடியாது.
ஒரு கட்சி ஆட்சி முறை அகல வேண்டும். கூட்டணி ஆட்சி மலர வேண்டும். ஒரு கட்சி ஆட்சியில் தலைவர்கள் எடுக்கிற முடிவு தான் முடிவு.
விஜயகாந்த், முதலமைச்சர் ஆவதற்கு என்ன தகுதி என்று கேட்கிறார்கள். கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொண்டதே தகுதி தான். ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பதே தகுதி தான்” என்று கூறியுள்ளார்.