டாஸ்மாக் ஊழல் குறித்து அதிமுகவினர் பல பகுதிகளில் ஒட்டி வரும் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்திய நிலையில் ரூ1000 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இது தொடர்பாக அமலாக்கத்துறை இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.
இந்நிலையில் டாஸ்மாக் ஊழல் விவகாரத்தை கையில் எடுத்துள்ள அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அதை வைத்து போராட்டங்கள் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி இந்த டாஸ்மாக் ஊழல் விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
அதை தொடர்ந்து தற்போது அதிமுகவினர் இந்த பிரச்சினையை முக்கிய பிரச்சினையாக கையில் எடுத்துள்ளனர். தற்போது பல பகுதிகளில் அதிமுகவினர் “1000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து 1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்?” என கேட்டு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க இந்த டாஸ்மாக் ஊழல் விவகாரம் விஸ்வரூபமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K