முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அதிமுக வழங்கிய தங்க கவசம்.. ஓபிஎஸ் கோரிக்கையை மறுத்த நீதிபதி..

வெள்ளி, 6 அக்டோபர் 2023 (14:15 IST)
முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அதிமுக வழங்கிய தங்க கவசத்தை பொருளாளர் சீனிவாசனிடம் வழங்கக்கோரிய வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடந்தது.

இன்றைய விசாரணையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கு குறித்து பதிலளிக்க 2 வாரம் அவகாசம் அளிக்க கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார். அதிமுக பொருளாளர் சீனிவாசன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் தங்க கவசம்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது. 3.7 கோடி ரூபாய் மதிப்பில், 13 கிலோ எடை கொண்ட இந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையின் போது வங்கிக்கு நேரில் வந்து அதிமுக பொருளாளர் கவசத்தை பெற்று அதை தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பது வழக்கமாக இருந்தது.

இந்த நிலையில் அதிமுக பொருளாளர் ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அதிமுகவின் பொதுச்செயலாளர் பழனிசாமியால் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன், தேவர் தங்க கவசத்தை பெற உரிமை கோரி கடிதம் மற்றும் அதற்கான ஆவணங்களை வங்கியில் சமர்பித்தார். 
 
இதற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்த  நிலையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அதிமுக வழங்கிய தங்க கவசத்தை பொருளாளர் சீனிவாசனிடம் வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடந்தது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்