சுற்றுலா சீசன் வந்தாச்சு.. குழந்தைகளுக்கு சுற்றுலாவை மேலும் சுவாரஸ்யமாக்க சில Activities!

Prasanth Karthick

செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (08:07 IST)

குழந்தைகளுக்கு விடுமுறை விட்டுவிட்ட நிலையில் எல்லாரும் சுற்றுலா செல்வதில் ஆர்வமாக இருப்பீர்கள்! இந்த நேரத்திலும் குழந்தைகளை ஸ்பெஷல் க்ளாஸ், கூடுதல் திறன் வளர்ப்புக்காக சம்மர் பயிற்சி வகுப்புகள் என சோர்வடைய செய்ய வேண்டாம். குழந்தைகளுக்கு சுற்றுலா கூடவே அறிவை வளர்க்கும் அற்புதமாக சில பொழுதுபோக்குகளும் உள்ளன. அவற்றிற்கு நீங்கள் குழந்தைகளை பழக்கப்படுத்தலாம். உங்களுக்காக சில பொழுதுபோக்குகள்

 

Postcrossing/Pictorial Cencellation: நீங்கள் சுற்றுலா செல்லும் பகுதியில் இருந்து உங்கள் முகவரிக்கோ, உங்கள் நண்பர்கள் முகவரிக்கோ கடிதம் எழுதலாம். இதற்கு வெறும் 50 பைசா தபால் அட்டை போதும். இவ்வாறு உங்களுக்கு நீங்களே எழுதி சேகரிக்கும் கடிதம் உங்கள் சுற்றுலா நினைவுகளை தபால் அட்டைகளாக சேமிக்க உதவும்.

 

மேலும் தமிழ்நாடு முழுவதும் 31 இடங்களில் Postcard Pictorial Cencellation உள்ளது. அந்தந்த ஊரின் பிரபலமான விலங்கு அல்லது பொருளை முத்திரையாக கொண்டதுதான் இந்த PPC. உதாரணத்திற்கு நீங்கள் நீலகிரி சுற்றுலா சென்றால் அங்கு முதுமலை தபால் நிலையம் (பின்கோடு 643 211) சென்று PPC கேட்டால் முதுமலையின் காட்டெருமை உருவம்(கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளது) பதித்த சீலை உங்களுக்கு தபால் அட்டையில் அச்சிட்டு தருவார்கள். இதற்கு கட்டணம் கிடையாது. 50 பைசா தபால் அட்டை தொடங்கி எந்த தபால் அட்டையில் வேண்டுமானாலும் எத்தனை முத்திரை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். இப்படி அந்தந்த பகுதியின் ஸ்பெஷல் முத்திரை பதித்த கார்டுகளை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பலாம் அல்லது நீங்களே சேகரிக்கலாம். இந்த PPC வேடந்தாங்கல், கன்னியாக்குமரி, மகாபலிபுரம் என பல சுற்றுலா தளங்களில் தனித்தனி அழகான முத்திரைகளில் கிடைக்கிரது. தமிழ்நாட்டில் எங்கெங்கு இதுபோன்ற PPC பெறலாம் என்பதை அறிய https://www.indianphilately.net/ppctn.html

 

 

Star walk: விண்வெளி என்றாலே பலருக்கும் தீராத ஆர்வம் இருக்கும். விண்வெளியில் ஏராளமான நட்சத்திர மண்டலங்களும், அதற்குள் சூரியனை விட பல மடங்கு பெரிய கோள்களும், நட்சத்திரங்களும் அடங்கியுள்ளன. இரவில் கண்ணை பறிக்கும் அந்த நட்சத்திர கூட்டங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள உதவும் ஒரு செயலிதான் இந்த Star walk. இந்த செயலியின் மூலம் இரவு நேரத்தில் நீங்கள் எந்த திசையில் மொபைலை திருப்பினாலும் அந்த பக்கம் உள்ள நட்சத்திரங்களையும், அதன் பெயர்களையும் தெரிந்து கொள்ள முடியும். மேலும் குறிப்பிட்ட நட்சத்திரத்தை நீங்கள் க்ளிக் செய்தால் அது எத்தனை ஒளியாண்டு தொலைவில் உள்ளது. அது எப்போது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். விண்வெளி ஆய்வுகளின் மீது குழந்தைகளுக்கு ஆர்வத்தை உருவாக்கும் முதல் படியாகவும், விடுமுறை இரவுகளில் நல்ல கேளிக்கையாகவும் இது அமையும்.

 

 

Merlin Bird ID : பறவைகளை கண்டு ரசிப்பவர்களா நீங்கள்? உங்களுக்கு ஒவ்வொரு பறவையையும் பார்த்ததும் அது இன்ன பறவை என்று இனம் சுட்ட முடியுமா? அதன் சத்தத்தை வைத்தே இன்ன பறவை என கண்டுகொள்ள முடியுமா? இதெல்லாம் கடினம் என்று தோன்றினால் உண்மை அதுவல்ல. நீங்கள் பறவைகளை அறிந்து கொள்ள விரும்பினால் இந்த மெர்லின் பேர்ட் ஐடி உங்களுக்கு அட்டகாசமான வழிகாட்டி. நீங்கள் சுற்றுலா செல்லும் பகுதிகளில் எத்தனையோ பறவைகள் எத்தனையோ விதமாக சத்தம் எழுப்பும். அப்போது இந்த மெர்லின் ஐடி செயலியை ஓபன் செய்து சவுண்ட் ரெக்கார்டை ஆன் செய்தால் போதும். அந்த சத்தத்தை வைத்து அது என்ன பறவை என்று அறிந்து அது பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த செயலி உங்களுக்கு வழங்கும்.

 

 

ஒரு பறவையை நீங்கள் பார்த்தால் இந்த செயலியில் உள்ள போட்டோ ஐடி மூலமாக ஒரு போட்டோ எடுத்தாலும் சரி. அது என்ன பறவை என்ன சாப்பிடும், எந்த பகுதிகளில் அதிகம் வாழும் என அனைத்து தகவல்களையும் உங்களுக்கு வழங்குகிறது. மேலும் அது எப்படி கத்தும் என்ற ஆடியோவையும் நீங்கள் அதில் கேட்க முடியும். அதுபோல நீங்கள் ரெக்கார்ட் செய்த பறவையின் ஆடியோவை அதில் அப்லோட் செய்வதன் மூலம் இதேபோல வேறு யாரோ ஒருவர் அந்த பறவையை இனம் காணும்போது அதன் சத்தம் எப்படி இருக்கும் என்பதை உங்களின் பதிவேற்றம் மூலமாக அவர்களும் கேட்டுணர முடியும். மொத்தத்தில் பறவைகளை பார்த்து ரசிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் அறிந்து கொள்ள இது உதவுகிறது. குழந்தைகளிடம் இதுபோல ஒவ்வொரு பறவையையும் கண்டுபிடிக்க சொல்வது நல்ல பொழுதுபோக்காக அமையும்

 

உங்கள் சுற்றுலா பயணங்கள் கேளிக்கை நிறைந்ததாக மட்டுமல்லாமல் அதோடே அறிவுசார்ந்த செயல்பாடுகளும் கொண்டதாகவும் அமைய இவை உங்களுக்கு உதவும். குழந்தைகளும் இப்படியான அறிவுசார் கேளிக்கை செயல்பாடுகளை விரும்புவர் என நம்புகிறேன். இதை பயனுள்ள தகவலாக கருதினால் பிறருக்கும் பகிருங்கள். அனைவருக்கும் கோடை விடுமுறை வாழ்த்துகள்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்