இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை! மத்திய அரசு அனுமதி! - கட்டணம் எவ்வளவு?

Prasanth K

வியாழன், 10 ஜூலை 2025 (12:17 IST)

எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் வழி இணைய இணைப்புக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

உலகம் முழுவதும் ஃபைபர் கேபிள்கள், ஏர் ஃபைபர் வழி இணைய சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம் முன்னெடுத்த நேரடி செயற்கைக்கோள் வழி இணைய இணைப்பு பல நாடுகளில் வரவேற்பை பெற்றுள்ளது. கேபிள் ஃபைபர், ஏர் ஃபைபர் இணைப்புகளை போல சிக்னல் அல்லது இணைப்பு பெறுவதில் உள்ள சிக்கல்கள் இதில் இல்லை என்பதால் உலகின் எந்த மூலையிலிருந்து செயற்கைக்கோள் வழி இணைய சேவையை பெற முடியும்.

 

முக்கியமாக செல்போன் அலைவரிசை பயன்படுத்த முடியாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளில் கூட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழி இணைய சேவை நன்றாக கிடைக்கும் என்றும், பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. உலக நாடுகள் பலவற்றிலும் அறிமுகமான ஸ்டார்லிங்க் இந்தியாவிலும் நுழைய அனுமதி கோரி வந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு அனுமதி அளித்துள்ளது.

 

ஸ்டார்லிங்க் இணைய சேவை வருகையால் ஏற்கனவே இந்தியாவில் உள்ள முன்னணி இணைய சேவை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பாதிக்குமா என்ற கேள்வி உள்ளது. ஆனால் வெளிநாடுகளில் ஸ்டார்லிங்க் சேவை வழங்கப்படும் தொகையை கணக்கிட்டால் அது இந்தியாவில் தற்போதுள்ள ஃபைபர் இணைய சேவை கட்டணத்தை விட அதிகமாக இருக்கும். உதாரணமாக அமெரிக்காவில் ஸ்டார் லிங்க் சேவைக்கு தொடக்க கட்டணமே 120 டாலர்களாக உள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.10,270 ஆகும். இந்த விலைக்கு இந்தியாவில் கட்டுப்படியாகாது என்பதை ஸ்டார்லிங்க் நிறுவனமுமே அறிந்திருக்கலாம்.

 

அதனால் இந்தியாவில் அதன் சந்தைக்கு ஏற்ப கட்டணம் இருக்கும் என்று மட்டுமே ஸ்டார்லிங்க் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எப்படியும் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், ஆக்ட் உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையிலான ஒரு கட்டணத்தை ஸ்டார்லிங்க் நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்