வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகாமல், திசையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவான நிலையில் நேற்று முன் தினமே புயல் சின்னமாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென தனது நகர்வை நிறுத்தியதால் அது புயலாக மாறும் நேரம் தாமதப்பட்டது. பின்னர் நேற்று தற்காலிக புயலாக உருவாகி கரையை நெருங்கும்போது வலுவிழக்கும் என கணிக்கப்பட்டது.
ஆனால் நேற்றும் புயலாக உருவாகாத நிலையில் இன்று சில மணி நேரங்களில் புயலாக மாறும் என்றும் நாளை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டது. ஆனால் இன்னமும் புயலாக உருவாகாமல் இருப்பதுடன், தொடர்ந்து தனது பாதையை மாற்றி வானிலை ஆய்வாளர்களையும், மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.
இந்நிலையில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் திசை மாறியிருப்பதாகவும், அதனால் சென்னை - புதுச்சேரிக்கு இடையே கரையை கடக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. புயலின் இந்த திடீர் மாற்றங்களால் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்படுவதும், திரும்ப பெறப்படுவதும், மழை குறைவாக இருக்கும்போதே பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விடுவதும் என மக்கள் சோதனைக்கு உள்ளாகியுள்ளனர். எப்படியாவது இது கரையை கடந்துவிட்டால் போதும் என்ற மனநிலையில் மக்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
Edit by Prasanth.K