மாணவிகளை கடித்த பாம்பு.. சர்வே எடுக்க வேற ஆளே கிடைக்கலையா? - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

Prasanth Karthick

புதன், 13 நவம்பர் 2024 (09:59 IST)

திருவண்ணாமலையில் வேளாண் நிலங்களை சர்வே எடுக்க சென்ற மாணவிகளை பாம்பு கடித்த நிலையில், அதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல்படூர் கிராமத்தில் வேளாண் நிலம், பயிர் குறித்த அனைத்து விவரங்களையும் டிஜிட்டல்மயமாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில்  ஈடுபட்டிருந்த  வேளாண் மாணவி சங்கரியை பாம்பு கடித்த நிலையில்  திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வருகிறார்.  அதேபோல் நம்மியந்தல் கிராமத்தில் இந்த பணியில் ஈடுபட்ட  குருராமலட்சுமி என்ற மாணவி விஷபூச்சி  கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மாணவிகளின் இந்த நிலைக்கு பொறுப்பற்ற திமுக அரசு தான் காரணம்.

 

டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு பதிலாக வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை கண்டித்து  கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்ட நான், ’’செப்பனிடப்படாத பகுதிகளில் பணியாற்றும் மாணவ, மாணவிகளை பாம்பு, தேள் போன்ற உயிரினங்கள் கடித்து அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும். பாதுகாப்பற்ற தனித்த பகுதிகளில் பணியாற்றும் போது மாணவ, மாணவியருக்கு சமூகவிரோதிகளால் பாதிப்பு ஏற்படலாம். இதற்கெல்லாம் அரசு பொறுப்பேற்குமா?
 

கல்வி கற்க வேண்டிய மாணவ, மாணவியரை இத்தகைய கடுமையான பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தேன்.

 

ஆனால், அதைப் பொருட்படுத்தாத திமுக அரசு, மாணவ, மாணவியரை கட்டாயப்படுத்தி இந்தப் பணியில் ஈடுபடுத்தியதால் தான் சர்வேயின் முதல் நாளிலேயே பாம்பு கடித்தும்,   விஷப்பூச்சி கடித்தும்  இரு மாணவிகள் மருதுவமனையில் சேர்க்கப்படும் நிலை  உருவாகியுள்ளது. திறனற்ற தமிழக அரசு அதன் தோல்விகளை மறைப்பதற்காக மாணவ, மாணவிகளை பலி கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாணவிகளுக்கு  பாதிப்பை  ஏற்படுத்திய திமுக அரசின் பொறுப்பற்ற செயல் கண்டிக்கத்தக்கது.

 

மாணவி சங்கரி, குருராமலட்சுமி  ஆகியோருக்கு  ஏற்பட்ட இந்த நிலைக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். மாணவிகளுக்கு தரமான  மருத்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.  டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் இருந்து வேளாண் மாணவ, மாணவியரை  உடனடியாக விடுவித்து வருவாய்த்துறை அல்லது தனியார் அமைப்பைக் கொண்டு இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்