தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருக்கும் சென்னையை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணமான நிலையில் கஸ்தூரி 7 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் நாளை மறுநாள் சங்கரன்கோவிலில் கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்துவதற்காக அவரை அழைத்துக் கொண்டு உறவினர்கள் சென்னை – கொல்லம் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்துள்ளனர்.
அப்போது கஸ்தூரிக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் கை கழுவும் பகுதிக்கு வந்த கஸ்தூரி வாந்தி எடுக்கும்போது நிலைதவறி அருகில் இருந்த கதவு வழியாக ரயிலுக்கு வெளியே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக ரயிலை நிறுத்த அபாய சங்கிலியை இழுத்துள்ளனர். ஆனால் அது வேலை செய்யவில்லை. உடனே ஓடி சென்று அருகில் இருந்த வேறு பெட்டியில் இருந்த சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். ஆனால் அதற்குள் ரயில் வேகமாக நீண்ட தூரம் வந்திருந்தது. அதனால் அங்கு தேடியும் கஸ்தூரி கிடைக்கவில்லை.
அதை தொடர்ந்து ரயில் விருதாச்சலம் வந்த பிறகு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் சொல்லி மீண்டும் கஸ்தூரியை தேடும் பணி தொடங்கியது. அப்போது உளுந்தூர்பேட்டையிலிருந்து ஒரு கிலோமீட்டர் அப்பால் கஸ்தூரி பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார். அதை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். வளைகாப்புக்கு சென்ற பெண் தவறி விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.