குஜராத் மாநிலத்தில் பிறந்த சர்தார் வல்லபாய் பட்டேல் "இந்தியாவின் இரும்பு மனிதர்" என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சர் போன்ற மிகப்பெரிய பொறுப்புகளை வகித்த இவர், சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர்.
இதனால், அவருக்கு குஜராத்தில் சிலை வைக்க பிரதமர் மோடி அம்மாநில முதல்வராக இருந்தபோது திட்டமிட்டார். அதன்படி கடந்த 2013ம் ஆண்டு நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தொலைவில் சாதுபெட் என்ற இடத்தில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
பிறகு அந்த சிலைக்கு 'ஒருமைப்பாட்டு சிலை' என பெயர் சூட்டப்பட்டு, சுமார் 182 மீட்டர் உயரத்தில் மிக பிரம்மாண்டமாக சிலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. தற்போது சிலை அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிந்து, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி சிலையைத் திறக்க முடிவு செய்தனர்.
ஆனால், பிரதமர் மோடி சிலையை திறந்து வைக்க அப்பகுதி பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு மற்றும் நில வசதிகள் செய்து தருவதாக கூறிய மோடி அரசு இதுவரை எங்களுக்கு எந்தவொரு சமூகநலத்திட்டமும் செய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.