போலி ஆவணத்தை வைத்து மாநகராட்சி ஆணையரையே ஏமாற்றிய கும்பல்! – பொதுமக்கள் மனு!

திங்கள், 27 நவம்பர் 2023 (16:15 IST)
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 80 வது வார்டு சுண்டக்காமுத்தூர் பகுதியில் இருந்து லாலா தோட்டம் செல்வதற்கு திட்ட சாலை ஒன்று உள்ளது.


 
இந்தப் பகுதி கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது.அதனை தனிநபர்(பால மணிகண்டன் மற்றும் அவரது மகன்) ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பி உள்ளார்.

இந்நிலையில் போலி ஆவணங்களை தயாரித்து மாநகராட்சி ஆணையாளரையே ஏமாற்றி நம்ப வைத்து அந்த நபர் திட்டசாலை இடத்தையும் சேர்த்து ஆக்கிரமித்துள்ளதாகவும் இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்போதைய தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்சுணனை அழைத்து வந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுணன் கூறுகையில், சர்வே ரெக்கார்டை மாற்றி தவறான ஆவணங்களை கொடுத்து முந்தைய மாநகராட்சி ஆணையாளரை ஆக்கிரமிப்பாளர் நம்ப வைத்துள்ளதாக தெரிவித்தார். அங்குள்ள 30 செண்ட் நிலம் தற்பொழுதும் மாநகராட்சி ஆணையாளர் பெயரில்தான் இருப்பதாகவும் சுமார் பத்து கோடி மதிப்புள்ள அந்த இடத்தை தவறான ஆவணங்களை கொண்டு அவர்கள் ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்தார்.

நான் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் அப்பகுதி கவுன்சிலராகவும் இருந்தவரை அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்றார்.

அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தவறான ஆவணங்களை கொடுத்து அரசாங்கத்தை நம்ப வைத்துள்ளதாக கூறினார். மேலும் அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் எல்லாம் மாறியதால் அந்த இடத்தை மீண்டும் அடைத்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.

அந்தத் திட்ட சாலையை அடைத்தால் அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.

மேலும் தற்பொழுது உள்ள வருவாய் அலுவலர் தான் அப்போதைய காலத்தில் மாநகராட்சி துணை ஆணையாளராக இருந்ததாகவும் அவர்களுக்கும் இது பற்றி தெரியும் என்பதால் ஒரே நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாக தெரிவித்தார்கள்.

மேலும் இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தான் ராஜாவாய்க்கால் சென்று சேரும் பகுதியையும் அடைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அப்பகுதியை சர்வே செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்