அண்மையில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்களோ, ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு நிதியோ ஒதுக்கப்படவில்லை. இதேபோல் இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களை மத்திய பட்ஜெட்டில் பாஜக அரசு புறக்கணித்ததாக கூறி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
இந்நிலையில் செய்தியாளரிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, முதல்வரிடம் கட்சியும், அரசுத் துறைகளும் கட்டுப்பாட்டில் இல்லை என்று விமர்சித்துள்ளார். எனவே அவர் உடனடியாக பதவி விலகுவதுதான் தமிழகத்துக்கு நல்லது என்றும் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து குற்றங்களுக்கும் போதை பொருட்கள் தான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்
மேலும் சென்னையில் வெள்ளநீர் வடிகாலுக்கு மத்திய அரசு ஒதுக்கிய 5,000 கோடி ரூபாய் செலவு செய்த கணக்கை, தமிழக அரசு வழங்காத வரை தமிழகத்திற்கு தம்பிடி காசை கூட மத்திய அரசு வழங்கக்கூடாது என்று எச்.ராஜா தெரிவித்தார். ஏற்கனவே மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவித நிதியும் ஒதுக்கப்படாத நிலையில், தற்போது பாஜக மூத்த தலைவர் தலைவர் எச். ராஜாவின் பேச்சு பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.