செம்பரம்பாக்கம் ஏரி திறப்பதற்கான அபாய ஒலி ஒலிக்கப்பட்டது!

புதன், 25 நவம்பர் 2020 (11:42 IST)
சென்னை செம்பரம்பாக்கம் ஏரி திறப்பதற்கான அபாய ஒலி தற்போது ஒலிக்கப்பட்டு வருகிறது.
 
வங்க கடலில் உருவான நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதை அடுத்து தமிழகம் முழுக்க தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் சென்னையில் குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் முழுமையாக நிரம்பியது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 24 அடியாகும்.
 
இதனிடையே தற்போது நிவர் புயல் மாமல்லபுரம் - புதுச்சேரி அருகே அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளதால் சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை  அடைந்தது. 
 
ஏற்கனவே மழை பொழிவை பொறுத்தே செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் இன்று நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்ப்போது ஏரி முழுமையாக நிரம்பியதை அடுத்து செம்பரம்பாக்கம் ஏரி திறப்பதற்கான அபாய ஒலி ஒலிக்கப்பட்டு வருகிறது. இதனை பார்வையிட அம்பத்தூர் துணை கமிஷனர் தீபா சத்தியன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனி ஆகியோர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்துள்ளனர்.  மேலும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்