10ஆம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த மறுக்கும் ஆசிரியர்கள்!

சனி, 21 ஏப்ரல் 2018 (15:07 IST)
வருகிற 24ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தப் போவதாக தமிழக ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

 
தமிழக ஆசிரியர் கூட்டணியின் ஐம்பெரும் விழா இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அகில் இந்திய செயலாளர் கூறியதாவது:-
 
மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக்குழுவை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். கல்வித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை நாங்கள் தொடர்ந்து முன்வைத்து வருகிறோம்.
 
எங்கள் கோரிக்கைகளை அரசு இதுவரை ஏற்கவில்லை. தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ஆசிரியர் கூட்டணியினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 
 
கல்வி நிலையங்களை மூடும் நடவடிக்கையிலும், ஆசிரியர் பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கையிலும் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 24ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியினை புறக்கணித்து போராட்டம் நடத்த உள்ளோம் என்று கூறினார்.
 
விடைத்தாள் பணியில் ஈடுபடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்