தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 15க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 15க்கும் குறைவான பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், பாதிப்புகளே இல்லாத பகுதிகள் பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
சிவப்பு மண்டலங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்து, மக்கள் குணமடைந்து வெளியேறுவதை கொண்டு 14 நாட்களில் அது ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்படும். ஆரஞ்சு மண்டலங்களில் 14 நாட்களில் புதிய பாதிப்புகள் ஏதும் கண்டறியப்படாத நிலையில் அது பச்சை மண்டலமாக மாற்றப்படும்.
தமிழகத்தில் 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக இருந்து வந்த நிலையில் பாதிப்புகள் குறைந்துள்ள 8 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி, திருச்சி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் கடந்த வராத்திலிருந்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இந்த மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கும், ஆரஞ்சு மண்டலத்திலிருந்து பச்சை மண்டலத்திற்கும் மாற வாய்ப்புகள் உள்ளன.