ஜெயலலிதா மரணம், ஆன்லைன் ரம்மி, பரந்தூர் விமான நிலையம்..? – கூடுகிறது அமைச்சரவை!

திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (08:39 IST)
இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடும் நிலையில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்திற்கு முன்னதாக இன்று அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கடந்த சில காலமாக தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுள்ள ஆய்வு அறிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட முடிவுகளை எடுப்பது தொடர்பாக இந்த அமைச்சரவையில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

அதேபோல கடந்த சில காலமாக ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பான தொடர் கோரிக்கைகள் நிலவி வருகின்றன. இதுதொடர்பான ஆய்வு குழு அறிக்கையும் முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு சட்டமன்றத்தில் புதிய சட்டம் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிறகு பரந்தூர் விமான நிலையத்திற்காக பொதுமக்களிடம் நிலங்களை பெறும் நடவடிக்கை தொடர்பாகவும், பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால் சென்னையில் மழைநீர் வடிகால் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்