ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம்; ஒலிம்பிக் தங்கம் தேடுதல்..! – முதல்வரின் அசத்தல் அறிவிப்புகள்!

வியாழன், 21 ஏப்ரல் 2022 (13:30 IST)
தமிழக சட்டமன்ற விவாதத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு துறை மேம்பாட்டுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.

இன்று தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் விதி 110க் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அதிக பதக்கங்களை வெல்வதை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு 3 கோடி ரூபாய் முதல் பல்வேறு ஊக்க உதவிகளை வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் வெற்றிவாகை சூட ஏதுவாக, பல்வேறு விளையாட்டுகளுக்கான கட்டமைப்புகளுடன் கூடிய பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் சென்னைக்கு அருகில் அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டு வீரர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்த தமிழகத்தின் நான்கு மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தலா 3 கோடி ரூபாய் மதிப்பில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்படும். இதன்மூலம் ஏழை, எளிய, நடித்தர குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களும் இலவசமாக விளையாட்டு பயிற்சி பெற முடியும்.

தமிழக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் வெல்வதற்கு வழிகாட்டு முயற்சியாக 25 கோடி ரூபாய் செலவில் ஒலிம்பிக் தங்கம் தேடுதல் திட்டம் தொடங்கப்படும்.

வடச்சென்னை பகுதியில் நவீன தொழில்நுட்பங்களோடு கூடிய நவீன குத்துச்சண்டை மைதானம் அமைக்கப்படும்.

மேலும் கையுந்து பந்து, இறகு பந்து, கூடை பந்து, கபாடி உள்ளிட்ட இதர உள் அரங்கு விளையாட்டுகளுக்கான கூடம் மற்றும் உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட உள்ளது.

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த தனியாக பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்பட உள்ளது.

தமிழக பாரம்பரிய தற்காப்பு விளையாட்டான சிலம்பத்தில் பயிற்சி பெறும் வீரர்களுக்கு வேலை வாய்ப்புகளில் 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் பல்வேறு சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்த முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை ஓபன் ATP டென்னிஸ் தொடரை மீண்டும் நடத்தவும், (Beach Olympics எனப்படும் கடற்கரை ஒலிம்பிக்ஸ் தொடரை நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கு இன்றே ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு, அந்தப் பணிகளும் சிறப்பாகச் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலமாக விளையாட்டுத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக வளர்ந்து சிறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்