மனித உரிமை மீறலில் தமிழகம் முதலிடம்.. திமுக ஆட்சிக்கு எதிராக 75 இயக்கங்கள் கண்டனம்..!

Mahendran

வியாழன், 17 ஏப்ரல் 2025 (12:12 IST)
மனித உரிமை மீறலில் தமிழகம் முதலிடம் என்று திமுக ஆட்சிக்கு எதிராக 75 இயக்கங்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
 மார்ச் 25 ஆம் தேதி சென்னையில் ஜாபர் குலாம் உசேன், 31 ஆம் தேதி மதுரையில் சுபாஷ் சந்திரபோஸ், ஏப்ரல் 1 ஆம் தேதி கடலூரில் 19 வயது முட்டை விஜய் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தற்காப்பு என்ற பெயரில் பொய்யான மோதல் சாவுகளை நடத்திவருகிறது காவல்துறை.
 
குற்றவாளிகளைக் கைது செய்த பின்பு, மீண்டும் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கும் மனித உரிமை மீறல் கலாசாரத்தை உருவாக்குவதில் இந்தியாவிற்கு வழிகாட்டியாகத் தமிழ்நாடு போலீஸ் திகழ்கிறது.
 
19-ஆம் தேதி திருநெல்வேலியில், முன்னாள் காவல் துணை ஆய்வாளர் கொலை வழக்கில் முகமது தவுபிக் (எ) கிருஷ்ணமூர்த்தி என்பவரையும், 20 ஆம் தேதி சிதம்பரத்தில் ஸ்டீபன் என்பவரையும் சுட்டுப் பிடித்தனர்.
 
23-ஆம் தேதி தேனியில் காவலர் கொலை வழக்கில் பொன்வண்ணன் என்பவரை, 28-ஆம் தேதி செங்கல்பட்டு வனப்பகுதியில் அசோக் என்பவரையும் சுட்டுப் பிடித்தனர்.
 
தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் மட்டும் இப்படிக் கைது செய்த பின்பு 6 பேரைச் சுட்டுப் பிடித்துள்ளனர். 3 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். போலீசாரால் சுடப்பட்டவர்களுக்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக பேசவில்லை, குற்றவாளிகளை முறையாக கைது செய்து, புலன்விசாரணை செய்து, நீதிமன்றத்தில் உரிய தண்டனை பெற்றுத் தந்து அவர்களை குற்ற செயல்பாட்டிருலிந்து தடுத்து நிறுத்துவதை வரவேற்கிறோம். ஆனால், போலீசார் தாமே சட்டத்தைக் கையில் எடுத்து தண்டிப்பதற்கு சட்டப்படி அதிகாரம் இல்லை. .
 
பொதுவாக சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்கும் நாள்களில், காவல்துறையின் சட்ட விரோதச் செயல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பார்கள் என்பதால் காவல் நிலையங்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படும். ஆனால் தற்போதைய நிலை தலைகீழாக உள்ளது.
 
கடந்த சில நாள்களில், 3 என்கவுண்டர்கள், 6 துப்பாக்கிச் சூடுகள், பலர் காவல் நிலைய பாத்ரூமில் வழுக்கி விழுந்த சம்பவங்கள் என சுதந்திர இந்திய வரலாற்றில் இல்லாத வன்முறையை, மனித உரிமை மீறலைத் தமிழ்நாட்டின் திமுக ஆட்சியின் கீழ் செயல்பட்டு வரும் காவல்துறை திட்டமிட்டு நடத்தி வருகிறது.
 
இது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப நாதியற்ற நிலை உள்ளது. எதிர்க்கட்சி வாய் திறக்கவில்லை, ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளும் கனத்த மெளனம் காக்கிறது. தமிழ்நாடு போலீஸ் தற்போது முன்னெடுக்கும் இதுபோன்ற காவல் வன்முறைகளையும், பச்சைப் படுகொலைகளையும், அதிகாரத் திமிருடன் இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களையும் அனுமதித்தால், சட்டத்தின் மீதான நம்பிக்கை பறிபோகும். ஜனநாயகத் தேரின் அச்சு முறியும்.
 
சட்டம் காக்க வேண்டிய காவல் துறையைச் சட்டம் பற்றிக் கவலைப்படாத கொலைப் படையாகப் பயன்படுத்தும் போக்கு, நமது சமூகத்தில் கட்டுக்கடங்காத விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதே இந்தியாவெங்கும் கிடைத்துள்ள பட்டறிவாகும். மாற்று அரசியலுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்பும் தமிழ்நாட்டுக்கு அதிகரித்து வரும் காவல் வன்முறை ஒரு கறையாகப் படிந்து வருகிறது
 
சமூகத்தில் நடந்து வரும் குற்றங்களை, கொடுங்குற்றங்களில் ஈடுபட்டு வருபவர்களை செயல்பட விடாமல் தடுப்பதற்கும், எதிர் வன்முறை தீர்வாகாது. நீதிமன்றத்தால் வழங்கப்படும் மரண தண்டனையைப் பெரும்பாலான உலக நாடுகள் ஒழித்துவிட்ட நிலையில், விசாரணை அதிகாரம் மட்டுமே பெற்ற காவல்துறை, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திச் சட்ட விரோதமாக மனித உயிரைப் பறிப்பது குற்றமாகும்.
 
சமூகத்தில் அதிகரித்து வரும் குற்றங்களை தடுப்பதற்காக, கல்வி, பயிற்சி, தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டிய காவல்துறை குறுக்கு வழியில் வன்முறையில் ஈடுபட்டு என்கவுண்டர் (Extrajudicial Killings) செய்வதை 75 இயக்கங்கள் கூட்டாக வண்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற வன்முறை மற்றும் என்கவுண்டரில் ஈடுபடும் போலீசார், உத்தரவிடும் உயர் அதிகாரியின் மீது வழக்கு பதிவு செய்து பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்.
 
காவல் நிலைய சித்திரவதை மரணம் மற்றும் என்கவுன்டர் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற நடுவர்கள், வெளிப்படைத் தன்மையோடு விசாரணை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநில மனித உரிமை ஆணையம் (SHRC) தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து நேரடி விசாரணை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் மாநில மனித உரிமை ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துவிடும்.
 
மாநில இலவச சட்ட உதவி ஆணைக்குழு இதுபோன்ற பொய்யான மோதல் சாவுகளில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டப்பிரிவு 12 இன் கீழ் தானாக முன்வந்து வழக்கு நடத்த வேண்டும்.
 
காவல் வன்முறைகள், குறிப்பாகப் பொய் மோதல் கொலைகள், வளர்ந்து வரும் நாகரீக சமூகத்தில் அருவருப்பாகும். 2022 ஆம் ஆண்டு சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞன் காவல் சித்திரவதையில் இறந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரையில், இனிமேல் இதுபோன்ற காவல் சித்திரவதைகள், வன்முறைகள் தமிழ்நாட்டில் நடக்காது என உத்தரவாதம் கொடுத்தார்.
 
முதல்வர் கொடுத்த உத்தரவாதத்தை நிலைநிறுத்த, இதுபோன்ற காவல் வன்முறைகளை தடுக்க முதல்வர் நேரடியாக தலையீடு செய்ய வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் பொய் மோதல் சாவுகள், காவல் சித்திரவதைகள் தொடருமானால் மக்கள் இயக்கங்களைத் திரட்டி போராட்டம் நடத்தும் கட்டாய நிலை ஏற்படும்.
 
எனவே தமிழ்நாடு அரசு காவல் வன்முறைகளையும், என்கவுண்டர் கொலைகளையும் தடுப்பதற்கு உடனே ஆவண செய்யக் கோருகிறோம்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்