தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை சந்தித்து பேசினார்.
சென்னை அடையாரில் உள்ள தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையில், அண்ணாமலை தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டும் என்று தினகரனுக்கு அழைப்பு விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் அறிவித்தனர். எனினும், கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அண்ணாமலை தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
இந்த நிலையில் இந்த சந்திப்பு, அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்பட்ட பிளவுக்கு பிறகு, பா.ஜ.க. மீண்டும் தனது கூட்டணியை வலுப்படுத்த முயற்சி செய்வதை காட்டுகிறது. இந்த சந்திப்பு தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.