திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த கார்.. அரசு தான் பொறுப்பு என கார் ஓனர் குற்றச்சாட்டு..!

Siva

திங்கள், 22 செப்டம்பர் 2025 (16:38 IST)
பாட்னா சந்திப்பு ரயில் நிலையம் அருகே உள்ள புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் அருகில், கனமழையின் காரணமாக ஏற்பட்ட ஒரு பள்ளத்தில் ஸ்கார்பியோ கார் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக எந்த காயமுமின்றி உயிர் தப்பினர். இந்நிலையில் காரின் உரிமையாளர் இந்த விபத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றஞ்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
காரின் உரிமையாளரான நிது சிங் சௌபே, சரியான சாலை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம் என்று குற்றம்சாட்டினார். 
 
இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள், கார் பள்ளத்தில் பாதி மூழ்கியிருப்பதை காட்டுகின்றன.
 
இந்த ஆபத்தான பள்ளத்திற்கு பீகார் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் தான் பொறுப்பு என்று கார் உரிமையாளர் குற்றம்சாட்டினார். மழைக்காலத்தில் 20 நாட்களுக்கும் மேலாக இந்த பள்ளம் சரி செய்யப்படாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 
சாலையில் ஒரு பள்ளத்தை ஏற்படுத்தி 20 நாட்களாக சரிசெய்யாமல் விட்டுவிட்டனர். இது மழைக்காலம். இதில் 5 பேர் விழுந்துள்ளனர். யாருக்காவது உயிர் போயிருந்தால் யார் பொறுப்பேற்று கொள்வது?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
 
மேலும், அந்த பள்ளத்தை சுற்றி எந்தவிதமான தடுப்பு வேலிகளோ அல்லது எச்சரிக்கை பலகைகளோ வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்