மத்திய அரசு வழங்கிய பி.எம் மின்சார பேருந்து சேவையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்தது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் சுற்றுசூழலை பேணும் விதமாக மின்சார பேருந்துகள் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக பிரதம மந்திரி மின்சார பேருந்து சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு ரூ.57,613 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டத்தின்படி, மின்சார பேருந்துகளை வாங்கி பராமரித்து இயக்கும் பொறுப்பு தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் மூலம் அளிக்கப்படுகிறது. இந்த சேவையில் கிடைக்கும் விளம்பர வருவாய், டிக்கெட் வருமானத்தை மாநில அரசு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சார்ஜிங் நிலையங்கள் அமைப்பது போன்ற பொறுப்பை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் இந்த பேருந்து திட்டத்தின் கீழ் தமிழ்நடு முழுவதும் 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி கோவைக்கு 150 பேருந்துகள், மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் நகரங்களுக்கு தலா 100 பேருந்துகள், ஆவது, அம்பத்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர் நகரங்களுக்கு தலா 50 பேருந்துகள் என 900 மின்சார பேருந்துகளை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிலையில், தமிழக அரசு இந்த திட்டத்தில் பேருந்துகளை பெற விருப்பம் இல்லாததால் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏன் மத்திய அரசு வழங்கிய பேருந்துகளை வாங்கவில்லை என விளக்கம் அளித்துள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மத்திய அரசு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் திட்டங்களுக்கு நிதி சரியாக தரப்படுவதில்லை என்றும், திட்டத்தின் பெயர்கள் மத்திய அரசுடையதாக இருந்தாலும், செலவு முழுவதும் மாநில அரசினுடையதாக ஆகிவிடுவதாகவும் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசு சொந்தமாகவே மின்சார பேருந்துகள் திட்டத்தை செயல்படுத்தி வருவதால் மத்திய அரசின் திட்டம் தேவைப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.