அதிகாரிகளை குஷிபடுத்த விருத்து கொடுத்த சுகேஷ் சந்தர் - போலீசார் அதிர்ச்சி

புதன், 19 ஏப்ரல் 2017 (15:49 IST)
இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்தர், தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு விருந்து கொடுத்து குஷிபடுத்தியது தெரியவந்துள்ளது.


 

 
அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தை பெற டெல்லியை சேர்ந்த சுகேஷ் சந்தர் என்பவரிடம் தினகரன் ரூ.60 கோடி பேரம் பேசி, ரூ.10 கோடியை முன்பணமாக கொடுத்தார் என டெல்லி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும், சுகேஷ் சந்தரை நேற்று முன் தினம் அதிகாலை போலீசார் கைது செய்ததோடு, அவரிடமிருந்து ரூ.1 கோடி 30 லட்சம் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர். மீதி பணம் ரூ. 8 கோடியே ரூ.70 லட்சம் எங்கே இருக்கிறது என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இதில் தினகரனுக்கு எதிரான வலுவாக ஆதாரங்களை அவர்கள் சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், சுகேஷ் சந்தரை 8 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
சுரேஷ் சந்தர் ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் அறை எண் 263-ல் 10 நாட்கள் தங்கியிருந்தார். அவருக்கு கடந்த 15ம் தேதிதான் ரூ.10 கோடி பணம் கை மாறியுள்ளது. ஹவாலா மூலம் இந்த பணப்பறிமாற்றம் நடந்துள்ளதாக தெரிகிறது.
 
அந்த ஹோட்டலில் சுகேஷ் தங்கியிருந்த போது, 10 அரசு அதிகாரிகள் அவரை சந்தித்துள்ளனர். அவர்களை மகிழ்விக்க மதுவுடன் கூடிய ஆடம்பரமான விருந்து கொடுத்து குஷிபடுத்தியுள்ளார் சுகேஷ். இதன் அடிப்படையில்தான், இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவேன் என  அவர் தினகரன் தரப்பிடம் வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.
 
இதனால் சுகேஷை சந்தித்த அதிகாரிகள் குறித்து டெல்லி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்